Thursday 4 March 2021

கண்ணன் பஜன்

 


யசோதை:

மாடு மேய்க்கும் கண்ணே நீ

போக வேண்டாம் சொன்னேன்

கண்ணன்:

போக வேணும் தாயே

தடை சொல்லாதே நீயே


காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்

கை நிறைய வெண்ணைய் தரேன்;வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 


காய்ச்சின பாலும் வேண்டாம்;கல்கண்டுச் சீனி வேண்டாம்

உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 


யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்

கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே 

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 


கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ?கண்டதுண்டோ சொல்லும் அம்மா?

கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன் 

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 


கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு

கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே 

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 


காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்

கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 


பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்

என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே 

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 


பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்

தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன் 

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)


No comments:

Post a Comment