என்னென்று சொல்லி யான் புலம்புவேன் - என் ஈசா
ஏகம்பத் தலம் மேவும் எந்தை சசிசேகரா
(என்னென்று...)
சொல்லொனாத் துயர்களும் சோகத்துச் சுமைகளும்
சுகமிலா நிலைதன்னில் சோர்வுகொள் நிலைதனை
(என்னென்று...)
வாடிடும் நெஞ்சத்தில் தளிரருள் புரிந்து நீ
வாஞ்சை யோடண்டிடும் வளர்நிலை பெறுவேனோ
நாடியே நலம்பெற நத்தித் தொழுகின்றேன்
நாதனே ஓடோடி வந்து நீ காப்பாயோ
(என்னென்று....)
நிலையாத பொருளெலாம் நிலையென்று நம்பியே
நெஞ்சமும் தடுமாறும் நிலையதும் போகுமோ
அறமிலா செயலாலே அழிவையும் தேடியே
அலைந்து கெட்டொழிதலும் அகலுமோ இனியுமே
(என்னென்று...)
உருகியே தினம்பாடி உம்மையே போற்றிட
ஊழ்வினை நீக்கி நீ நலவளம் அருள்வையோ
உமையாளின் மறுபாதி உலகாளும் சுபஜோதி
உற்றவன் வேண்டினேன் உவந்தருள் புரிவையோ
(என்னென்று....).
No comments:
Post a Comment